இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலை கொடூர தாக்குதல் என மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கூறியுள்ளார். உயிரிழந்த இரண்டு துணை ராணுவ படை வீரர்களின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மணிப்பூரில் அமைதி நிலை திரும்ப தாக்குதல் மேகொண்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.