புதுடெல்லி: காசா நகரை கைப்பற்றுவோம் என்ற இஸ்ரேலின் நோக்கத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் அந்த நகரத்தின் மீது ராணுவ படையை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக பயன்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் வரும் அக்டோபர் 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை முழுவதுமாக நிறைவு செய்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா அறிவித்தது. இந்தச் சூழலில்தான் காசா நகர் மீது இதுவரை இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா கூறியுள்ளது. அவர்களில் பலர் அங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வரும் மக்களின் கவனத்துக்கு… இந்த தருணம் முதல் தெற்கு நோக்கிய பயணங்களுக்கு சலா அல்-தின் சாலை மூடப்படுகிறது. ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத படைகளுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் பலத்த சக்தி படைத்த படையை பயன்படுத்தவுள்ளோம்.
அதேநேரத்தில் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அடைக்கலம் தேடி தெற்கு நோக்கி நகர்ந்துள்ள மக்களுடன் இணைய அல்-ரஷீத் சாலையை பயன்படுத்தலாம்” என அவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று காசா மக்கள் நகரின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தற்போது அந்த தற்காலிக சாலையை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எஞ்சியதை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நகரும் காசா மக்கள்: வியாழக்கிழமை அன்று எஞ்சியதை எடுத்துக் கொண்டு பாலஸ்தீன மக்கள் தெற்கு நோக்கி நடை வழியாக பயணித்தனர். சிலர் கார் மூலமாகவும் புறப்பட்டு சென்றனர். ‘இடைவிடாது தீவிர குண்டு வீச்சினை எதிர்கொள்கிறோம். எங்கள் வாழ்வில் ஆபத்தை தவிர வேறு எதுவும் இல்லை’ என காசா நகர வாசியான ஷமி கூறியுள்ளார்.
‘எங்கள் வாழ்க்கை, எங்கள் எதிர்காலம், எங்கள் பாதுகாப்பு உணர்வு என நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பயணம் செய்ய கூட பணம் இல்லாதபோது நாங்கள் எப்படி இங்கிருந்து செல்ல முடியும்?’, ‘இஸ்ரேல் தாக்குதலில் எங்கள் வீட்டினை இழந்து விட்டோம். அது முதல் நாங்கள் கூடாரத்தில் வசித்து வருகிறோம்’, ‘குண்டுவீச்சு தாக்குதல் தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடக்கலாம். எங்கள் பிள்ளைகள் பயந்து போயுள்ளனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை’ என காசா மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழக்கும் காசா மக்களால் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் அங்கு நிலவும் உணவு பஞ்சம் காரணமாக தினசரி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.