சென்னை: திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த நிலை மற்றும் இணையவழியில் பட்டம், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். எனினும், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் அவற்றில் சேரும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன. இதையடுத்து, திறந்தநிலை மற்றும் இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலை மானியக் குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு, இயன்முறை சிகிச்சை, கட்டிடக்கலை, சட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவ சேவை சார்ந்த படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகள் திறந்த நிலை மற்றும் இணைய வழியில் பயிற்றுவிக்க அனுமதி கிடையாது.
எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக் கழகம், ராஜஸ்தான் சுரேஷ் கியான் விகார் பல்கலைகழகம் ஆகியவற்றில் 2024– 25, 2025– 26 கல்வியாண்டுகளில் இணைய வழி கல்வி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.