தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிராச்சாரத்தை தூள் கிளப்புவது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தனித்துவமான ஸ்டைல். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை அண்மையில் அறிவித்தார் சீமான். இதை ஏற்காமல் இருபதுக்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் சீமானுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.
நாதக சார்பில், கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டம் நடத்திய சீமான், பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார். இதற்கு கண்டனம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்டும்” என குரல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேனியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் போட்டார் சீமான். இந்தக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது குடும்பத்தினரையும் ஒருமையில் கடுமையாக விமர்சித்தார் நாதக நிர்வாகியான கல்யாணசுந்தரம். அதை ரசித்த சீமான், அந்த மேடையிலேயே அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தார்.
இந்த நிலையில், கல்யாணசுந்தரத்தை மாற்ற வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நாதக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களை அழைத்துப் பேசிய சீமான், “கல்யாணசுந்தரம் தான் வேட்பாளர். நான் சொல்வதை கேட்டால் கேளுங்கள்… இல்லாவிட்டால் வெளியேறுங்கள்” எனச் சொன்னதாகத் தெரிகிறது.
இதையடுத்து, நாதக தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில இணைச் செயலாளர் சுபாஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை சந்தித்து தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து நாதக வழக்கறிஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் பிரபாகர மூர்த்தி, குருதிக்கொடை பாசறை செயலாளர் ராமராஜ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் அண்ணாச்சியை சந்தித்து திமுக-வில் ஐக்கியமாகினர்.
திமுக-வில் இணைந்த இவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டத்தில் ஊசலாட்டத்தில் உள்ள நாதக நிர்வாகிகளை அண்ணாச்சியிடம் அழைத்துச் செல்லும் முயற்சியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரபாகர மூர்த்தி, “2016-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் நாதக சார்பில் இதே கல்யாணசுந்தரம் போட்டியிட்டு, 3,833 வாக்குகள் பெற்றார். தேர்தலில் தோற்ற பிறகு நாதக-வை விட்டு விலகி, ‘தமிழர் விடுதலை மீட்புக் களம்’ என்ற அமைப்பை தொடங்கியவர், பட்டியலினத்தில் உள்ள பிற சமூகங்களுக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வந்தார்.
இதே நபர் தான் 2019 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் நாதக வேட்பாளராகப் போட்டியிட்ட சீமானின் உறவினரை எதிர்த்து போட்டியிட்டவர். 2021 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாக பரமக்குடியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாகவும் வேலை செய்தார். இப்படிப்பட்ட நபரை மீண்டும் வேட்பாளராக அறிவித்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகும். எங்களால் அரசியல் செய்ய இயலாது என தலைமையிடம் தெரிவித்தோம். தலைமை அதைக் கேட்காததால் நாங்கள் வெளியேறிவிட்டோம்” என்றார்.
இது தொடர்பாக கல்யாணசுந்தரத்திடமும் பேசினோம். “அண்ணன் சீமான் உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளராக தேர்தல் பணியை தொடங்கி உள்ளேன். எனக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 2021 தேர்தலில் நாதக பெற்ற 25 ஆயிரம் வாக்குகள் கொள்கைக்கு கிடைத்த வாக்குகளே அன்றி, தனி நபர்களுக்கு கிடைத்தது அல்ல. அதேசமயம், நாதக-வை விட்டு விலகிய நபர்கள் நாதக கொள்கைக்கு நேர் எதிரான திமுக-வில் இணைந்திருப்பது ஆதாயத்திற்காக மட்டுமே” என்றார் அவர்.
தேர்தல் நெருங்குவதற்குள், கட்சிகளுக்குள்ளேயே நடக்கும் கலகக் குரல்களை சமாளிப்பதே கட்சித் தலைவர்களுக்கு பெரும்பாடாகி விடும் போலிருக்கிறது!