மதுரை: ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்ட்டலில் பதிவேற்றம் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரிலும் அனுப்பி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தூத்துக்குடியை சேர்ந்த ஷார்ப் டேங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிஷாமேனன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தில் 2022-ல் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 74-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தோம். இருப்பினும் எங்கள் நிறுவனத்துக்கு கூடுதல் வரி, வட்டி மற்றும் அபராதம் விதித்து மாநில வரி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, மேல்முறையீடு மனுவை தகுதி அடிப்படையில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க நெல்லை வணிக வரி துணை ஆணையருக்கு (ஜிஎஸ்டி- மேல்முறையீடு) உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 74-ன் கீழ் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும். 30 நாள் அவகாசம் வழங்கப்படும். அந்த அவகாசம் முடிந்தால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஜிஎஸ்டி அதிகாரிகள் தங்களின் உத்தரவை ஜிஎஸ்டி போர்டலில் பதிவேற்றம் செய்துள்ளனர். நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவில்லை. இது தெரியாததால் உரிய காலத்தில் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இதனால், உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
ஜிஎஸ்டி அதிகாரிகள் தரப்பில், ஜிஎஸ்டி தொடர்பான ஆட்சேபனைக்குரிய உத்தரவுகள் போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும். அந்த உத்தரவு பதிவேற்றம் செய்ததில் இருந்து கடிகாரம் ஒலிக்கத் தொடங்கும். அதைக் கவனிக்க மனுதாரர் தவறிவிட்டார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் ஜிஎஸ்டி விதிப்பு தொடர்பாக ஆட்சேபனைக்குரிய உத்தரவை ஜிஎஸ்டி போர்டலில் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதா? உத்தரவு பதிவேற்றம் செய்த நாளிலிருந்து மேல்முறையீடு செய்வதற்காக வரம்பு தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிஜிட்டல் வசதியைப் புறக்கணிக்க முடியாது. பெரும்பான்மையான சிறு வணிக நிறுவனங்களில் மதிப்பீட்டாளர்களால் பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்களால் வருமான வரி தாக்கல் செய்யப்படுகிறது. ஆலோசகர்கள் தங்கள் சேவைக்குக் கட்டணம் வசூலிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் பதிவு ரத்தான பிறகு போர்டலை அணுக முடியாது.
ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆட்சேபனைக்குரிய உத்தரவுகளை ஜிஎஸ்டி போர்ட்டலில் பதிவேற்றுவது கட்டாயமாகும். அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. இந்த வழக்கில் ஆட்சேபனைக்குரிய உத்தரவு போர்ட்டலில் மட்டுமே பதிவேற்றப்பட்டு மதிப்பீட்டாளருக்குத் தெரிவிக்கப்படாததால் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த மனுவை தாக்கல் செய்வதற்காக மனுதாரர் போர்ட்டலில் இருந்து ஆட்சேபனைக்குரிய உத்தரவை பதிவிறக்கம் செய்துள்ளார். எனவே, ஜிஎஸ்டி தொடர்பான ஆட்சேபனைக்குரிய உத்தரவை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். பின்னர் மனுதாரர் ஆட்சேபனைக்குரிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். அதில் உத்தரவு வரும்வரை ஜிஎஸ்டி ஆட்சேபனைக்குரிய நோட்டீஸை அமல்படுத்த முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.