சென்னை: தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ரோபோ சங்கர்? மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்தது.
விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மட்டுமின்றி தற்போது மதுரை முத்து, சிவகார்த்திகேயன் போன்றோரும் பிரபலமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்துடன் சேர்ந்து ஜோடியாகத்தான் ரோபோ சங்கர் தோன்றுவார். ‘ஒரு கிளி உருகுது’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து 80-களின் நடனத்தை ரீ-கிரியேட் செய்தது அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் தொடங்கி காமெடியனாக உருவெடுத்தார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கரை எந்த கமல் படம் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சியில் திரையரங்க வாசலில் பார்த்துவிடமுடியும். அந்தளவுக்கு கமல் மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.