புதுடெல்லி: அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம் சாட்டியது. அந்த நிறுவனத்தின் அறிக்கையை மையமாக வைத்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இதை எதிர்த்து அதானி எண்டர்பிரைசஸ் சார்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் கடந்த 6-ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் அதானி குழுமத்துக்கு எதிரான அவதூறு செய்திகளை
வெளியிட தடை விதிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 138 யூ டியூப் வீடியோக்கள், 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை 36 மணி நேரத்தில் நீக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து செய்தியாளர்கள் தரப்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் தொடர்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு கவலையளிக்கிறது. இந்த உத்தரவு செய்தியாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு எதிராக உள்ளது. நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தள பதிவுகளை நீக்க மத்திய தகவல்
ஒலிபரப்புத் துறை உத்தரவிட்டு உள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபி நிராகரிப்பு: அதானி குழுமத்தில் மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எதுவும் நடைபெறவில்லை என்பதைக் குறிப்பிட்டு,
அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது.
“ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதாரமற்றது என்பதை செபியின் ஆழமான விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது. அதானி குழுமம் எப்போதும் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடித்து வருகிறது” என அதானி குழும தலைவர் கவுதம் அதானி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.