அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காயம் கடந்த சில ஆண்டுகளான கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
3 மாத பயிர், நல்ல சந்தை வாய்ப்பு போன்ற காரணங்களால் பலரும் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், பயன்பாடு குறைந்துவிட்டதாலும் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் சந்தையில் தேங்கி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி துறையூரைச் சேர்ந்த சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயி ராஜமாணிக்கம் கூறியது; குறுகிய கால பயிரான சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விதை வெங்காயம், இடுபொருள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, ஆள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால், கிலோ சின்ன வெங்காயம் ரூ.25-க்கும் அதிகமாக விற்றால் தான் கட்டுப்படி ஆகும். இதற்கு கீழ் விலை குறைந்தால் நஷ்டம் தான்.
ஆனால், இப்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.10-க்குதான் விலை போகிறது. மழைக் காலம் தொடங்கிவிட்டதால் இந்தப் பருவத்தில் விளையும் வெங்காயத்தை பட்டறை அமைத்து சேமித்து வைக்கவும் முடியாது. எப்படியாவது விற்பனை செய்தே ஆக வேண்டும் என்பதால் நஷ்டத்துக்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
திருச்சி மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராசு கூறியது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளதால் உற்பத்தி அதிகமாகி மக்களின் அன்றாட தேவையைவிட அதிகமாக சந்தைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வெங்காய மார்க்கெட்டுகளுக்கு தினமும் 2,000 டன் சின்ன வெங்காயம், 5,000 டன் பெரிய வெங்காயம் வரத்து உள்ளது. ஆனால், இதில் பாதி அளவுதான் தேவை உள்ளது. மீதியுள்ள வெங்காயம் மார்க்கெட்டுகளில் தேங்கிவிடுகிறது.
மழைக் காலங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது. எனவே, வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.
மேலும், மாதந்தோறும் தமிழகத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு 4,000 டன் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி 20 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களாக 800 டன்னாக ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனாலும் வெங்காயம் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.
எனவே, வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான வரியை ரத்து செய்ய வேண்டும். வெங்காயத்துக்கான கொள்முதல் விலையை அரசு அறிவித்து, கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.