புதுடெல்லி: மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு அரசின் வேண்டுகோளின் பேரில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருவூல பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 2019 முதல் இந்திய அரசு இதுபோன்ற பல கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் ஆண்டுதோறும் மாலத்தீவுக்கு வட்டி இல்லா நிதி உதவியை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில், மாலத்தீவு அரசு கருவூலப் பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான ஏற்பாட்டின் கீழ் மாலத்தீவுகளுக்கான அவசர நிதி உதவியாக பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.