‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை.
இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் & டீச் புரொடக்ஷன் சார்பில் சாய் வெங்கடேஸ்வரனுடன் இணைந்து ‘தண்டகாரண்யம்’ படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்: “நாங்கள் இங்குப் பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தைச் சரிசெய்ய வேண்டும் என்கிற முனைப்போடு வந்திருக்கிறோம். நான் இயக்குநராக வரும்போது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஆனால், மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர்” என்றார். நீலம் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து ‘வேட்டுவம்’, ‘பைசன்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.