செக்கர்ஸ்: இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ஸ்டார்மருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ட்ரம்ப், “ நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன்.
எங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு, அவர் ஒரு அழகான பதில் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் நான் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன்.
உக்ரைனுடனான தற்போதைய மோதலில் புதின் எனக்கு ‘மிகப்பெரிய ஏமாற்றம்’ தந்துள்ளார். மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால், புதின் போரை விட்டு வெளியேறிவிடுவார். அவருக்கு வேறு வழியில்லை. சீனா தற்போது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய வரியை செலுத்துகிறது, ஆனால் நான் இன்னும் சில தடைகளையும் விதிக்க தயாராக இருக்கிறேன். எண்ணெய் மூலமான வருவாய் குறைந்தால், மிக எளிமையாக, ரஷ்யா இந்த போருக்கு தீர்வு காணும்.
நாங்கள் இதுவரை ஏழு மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தோம், அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கக்கூடியவை என்று முதலில் கருதப்படவில்லை. நாங்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம், அது இரண்டு அணுசக்தி நாடுகள்.
அந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது முற்றிலும் வர்த்தகத்திற்காக மட்டுமே. அவர்கள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தபோது, நீங்கள் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால், போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்” என அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவால் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. இந்த மோதலை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார், ஆனால் இந்தியா எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதேபோல, சமீபத்தில் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களின் மீதான வரிகளை 50% ஆக உயர்த்தியது. இதில் ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்காக 25% கூடுதல் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.