ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஹுரியத் மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரணமாக சோப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சாஜத் லோன், ஹுரியத் மாநாட்டு கட்சியின் தற்போதைய தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மறைந்த தலைவர் அப்துல் கனி பட் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் முடிவு மோசமானது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை என்பதை இது காட்டுகிறது. ஹஸ்ரத்பால் தர்காவில் நடந்த சம்பவம் மக்களின் கோபத்தை காட்டியுள்ளது. மக்களின் ஆழ்ந்த கோபத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மறுக்கும் பாஜக, மக்களின் நீண்டகால உணர்வுகளை அடக்குகிறது.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பாஜகவுக்கு ஆர்வம் இல்லை. அரசியல் காரணங்களுக்காக காஷ்மீரை எப்போதும் பதற்ற நிலையிலேயே வைத்துள்ளது. இது அபாயகரமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். சாஜத் லோன் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில், ‘‘பேராசிரியர் அப்துல் கனி பட் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்பதை தடுப்பதற்காக நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமை உள்ளது’’ என்றார்.
ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் விடுத்துள்ள செய்தியில், ‘‘அப்துல் கனி பட் இறுதிச் சடங்கை விரைவில் முடிக்கச் சொல்லி அவரது குடும்பத்தினரை அரசு அதிகாரிகள் வற்புறுத்துவது வேதனையளிக்கிறது. எனது 35 ஆண்டு கால நண்பர் மற்றும் வழிகாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உரிமை எனக்கு மறுக்கப்படுகிறது. இது தாங்கிகொள்ள முடியாத கொடூரம்’’ என்றார்.