சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயில் தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்றது தொடர்பாக, 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் பெரிய கோட்டமாக, சென்னை ரயில்வே கோட்டம் விளங்குகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா வரை ரயில்வே எல்லையாகவும், மொத்தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதையாகவும் உள்ளது.
சென்னையில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி ஆகிய பிரதான வழித் தடங்களில், தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை இயக்கப்படுகின்றது. இதுதவிர, 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இவ்வழித் தடங்களில், தண்டவாளத்தை கடக்கும் நபர்கள் சிலர் அவ்வப்போது ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் நடைபெறுகிறது.
ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து, கடக்க முயன்றது உட்பட சில காரணங்களால், சென்னை ரயில்வே கோட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயிலில் அடிப்பட்டு 228 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தைக் கட்டுப்படுத்த, ரயில் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க சென்னை ரயில்வே கோட்டம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைவதை தடுக்க, ஆர்பி.ஃப் போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்பவர்களை பிடித்து வழக்குப் பதிந்து, அபராதமும் விதிக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சென்னை கோட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து, கடக்க முயன்ற 944 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, வழக்கு தொடரப்பட்டு, ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்லவே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் தண்டவாளங்களில் சட்டவிரோதமாக நுழைவது, ரயில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதைத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் 126 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அனைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களும் ரயில் தண்டவாளங்களைக் கடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நொடி கவனக் குறைவுகூட ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தக் கூடும். பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக்காக நடைமேம்பாலங்கள், லெவல் கிராசிங்குகள், சுரங்கப் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.