புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வ நாதர் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் சேவைத் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோயிலின் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த சரஸ்வதி சார்பில் சஹஸ்ரசண்டி வழிபாடு, அகில பாரத சன்யாசி பரிஷத் நடத்தப்பட்டன. உத்தர பிரதேச முன்னாள் அமைச்சரும் தெற்கு வாராணசியின் எம்எல்ஏவுமான நீலகாந்த் திவாரி தலைமையில் 51 அறிஞர்களின் உதவியுடன் யாகம் நடத்தப்பட்டது. மேலும் நீலகாந்த் திவாரி தலைமையில் 51 குவிண்டால் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
காசி விஸ்வநாதர் கோவிலூர் அறக்கட்டளை சார்பில் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதன்படி வாராணசியில் உள்ள 59 சம்ஸ்கிருத பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிஎச்யு மருத்துவமனை, பாபா புற்றுநோய் மருத்துவமனை, டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 லட்டுகள் வழங்கப்பட்டன.
சங்கவேத வித்யாலயா (திராவிட ஜி) சார்பில் சிரஞ்சீவி வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஷோடசோபசார வழிபாடு, நவக்கிரக ஸ்தோத்திர பாராயணம், 10,000 மிருத்யுஞ்சய கீர்த்தனைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. சங்கவேத வித்யாலயா சார்பில் தெய்வ வழிபாடு மற்றும் மகா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்பட்டது. வெங்கட ராமன் கணபதியின் சிவ மஹிம்னா ஸ்தோத்திர பாராயணம் நடைபெற்றது.