டெல்லி: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது. இந்த போன்களை தலைநகர் டெல்லியின் சாகேத் பகுதியிலும், மும்பையின் பிகேசி-யிலும் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி அன்று ஐபோன் 17 வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் என நான்கு போன்கள் அறிமுகமாகி உள்ளன. ஆண்டுதோறும் ஐபோன்களை மேம்படுத்தி புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 17 அறிமுகமாகி உள்ளது.
“ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை நான் பெற்றதில் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன். இந்த புதிய டிசைனில் போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஏ19 Bionic சிப் இடம்பெற்றுள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் என கருதுகிறேன். ஆரஞ்சு வண்ணத்தில் போனை பெற வேண்டுமென விரும்பினேன். அந்த வகையில் எனக்கு இப்போது அது கிடைத்துள்ளது” என அமான் என்ற வாடிக்கையாளர் தெரிவித்தார்.
“நாள் நேற்று இரவு 8 மணி முதலே வரிசையில் நிற்க தொடங்கினேன். ஆரஞ்சு நிற ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன் தான் எனது சாய்ஸ். கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றில் இந்த முறை மாற்றங்கள் செய்துள்ளனர். நிச்சயம் இது வித்தியாசமான லுக் மற்றும் அனுபவத்தை கொடுக்கும்” என இர்பான் என்பவர் கூறினார்.