அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு அபுதாபியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்திருந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் 4 புள்ளிகளுடன் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஓமன் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறிவிட்டதால் இன்றைய ஆட்டத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி குறைந்த அளவிலான இலக்கையே துரத்தி வெற்றி கண்டிருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் களத்தில் போதிய அளவு நேரத்தை செலவிடும் வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி டாஸை வெல்லும் பட்சத்தில் பேட்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
போதிய அளவிலான ஓய்வு இருந்துள்ளதால் இந்திய அணியின் விளையாடும் லெவனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.
ஜதிந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 161 ரன்களை துரத்திய நிலையில் 67 ரன்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 173 ரன்களை துரத்திய போது 130 ரன்களுக்கும் ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் அந்த அணியில் உள்ள எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஒரு முறை கூட 30 ரன்களை எட்டவில்லை. அதிகபட்சமாக ஹம்மத் மிர்ஸா 27 ரன்களும், ஆர்யன் பிஷ்த் 24 ரன்களும் எடுத்திருந்தனர். பலமில்லாத அந்த அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்து வீச்சு துறையிடம் இருந்து கடும் சவால்களை சந்திக்கக்கூடும்.