சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை மற்றும் புறநகரில் பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டிவரும் இவரது நிறுவனம், அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இவரது வீட்டில் நேற்று காலைமுதல் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் ரெட்டியின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இவரது நிறுவனம் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, பண மதிப்பிழப்பு காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சென்னை ஈசிஆரில் நிலங்களை வாங்கியிருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், பண மதிப்பிழப்பு காலத்தில் ராமகிருஷ்ணன் ரெட்டி மூலம் பலர் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிருப்பதாக, கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வருமான வரி சோதனையின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் சசிகலாவின் பினாமி என்றும் கூறப்படுகிறது.
பண மதிப்பிழப்பு காலத்தில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து காஞ்சிபுரத்தில் சசிகலா ஆலை ஒன்றை வாங்கியிருந்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஐ எஃப்ஐஆரில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், ராமகிருஷ்ணன் ரெட்டி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை புரசைவாக்கம் தம்பு சாமி தெருவில் வசித்து வரும் வைர வியாபாரி மோகன்லால் கத்தாரி வீட்டிலும், சவுகார்பேட்டையில் உள்ள அவரது நகைக்கடையிலும் காலை 6 மணிமுதல் சோதனை நடைபெற்றது. மேலும், திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உட்பட சென்னையில் 6 இடங்களில் நேற்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் முதலீடுகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் முதலியவற்றை கைப்பற்றி அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. சோதனை தொடர்பான எந்த ஒரு தகவலையும் அமலாக்கத் துறை இதுவரை வெளியிடவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, சோதனை விவரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.