புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காகவும் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் இந்தியா ஆய்வு செய்யும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அப்துலாசிஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர். பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய 4 மாதங்களுக்குப்பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையேபரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள செய்தியை பார்த்தோம். இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளதை மத்திய அரசு அறியும்.
நாட்டின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காகவும் சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் மத்திய அரசு ஆய்வு செய்யும். நாட்டின் தேசிய நலனை பாதுகாப்பதிலும், நாட்டின் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஒப்பந்தம் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே ஏற்பட்டுள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதி அரேபியா தனது எப்-15 மற்றும் டைபூன் ரக போர் விமானங்களை அனுப்பும் என பாகிஸ்தான் கனவு காணலாம். ஆனால், கள நிலரத்தை அறிந்து தான் இந்த விஷயத்தில் சவுதி அரேபியா முன்னுரிமை அளிக்கும்.
நேட்டோ படைகள் போல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தனிப்படை அமைக்க திட்டமிட்டு வருகின்றன. இஸ்ரேலை குறிவைத்தே, அணு ஆயுதம் வைத்துள்ள பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்தியாவை விட இஸ்ரேலை குறிவைத்து செய்யப்பட்ட ஒப்பந்தம். இவ்வாறு அவர்கள் கூறினர்.