புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய சந்தைக்கான தனது நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைப் பற்றி அவர் விவாதித்தார். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் உறுதி அளித்தார்.
பெப்சிகோ நிறுவனம் லிங்டுஇன் தளத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளதாவது: பெப்சிகோ தலைவர் லகுவார்ட்டாவுடன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, பெப்சிகோவின் இந்தியாவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது, உற்பத்தி, நிலைத்தன்மை, புதுமை மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பெப்சிகோவின் வாரியத்திற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக லகுவார்ட்டா தலைமை தாங்கி வந்தாலும், பிரதமருடனான அவரின் சந்திப்பு இது முதல் முறையாகும். பெப்சிகோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக்ருத் கோடேச்சாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பெப்சிகோவை பொறுத்தவரை அதன் வளர்ச்சிக்காக முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சந்தைகளில் இந்தியா மிக முக்கியமான ஒன்றாகும்.
அசாம், ம.பி.யில் புதிய ஆலை அதன்படி நிறுவனம் இரண்டு புதிய ஆலைகளில் முதலீடு செய்கிறது. அசாமில் ஒரு உணவு ஆலை மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு செறிவூட்டப்பட்ட ஆலைக்காக இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் மதுரா அருகே புதிதாக சிற்றுண்டி ஆலை அமைக்கவும் கணிசமான முதலீட்டை பெப்சிகோ மேற்கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.