திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் இவ்விழாவுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
பிரம்மோற்சவத்திற்கு திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் கமாண்டோக்கள், ஆயுதப்படையினர் என சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
பிரம்மோற்சவ ஏற்பாடுகள் திருமலை மற்றும் திருப்பதியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோயில் உட்பட திருமலையில் முக்கிய இடங்கள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு, கோயிலுக்குள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 23-ம் தேதி அங்குரார்ப்பண நிகழ்ச்சி ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது. அன்று, ஏழுமலையானின் மெய்காப்பாளராக கருதப்படும் விஸ்வக்சேனர் ஆயுதம் ஏந்தி மாட வீதிகளில் உலா வந்து பாதுகாப்பை பார்வையிட உள்ளார்.
24-ம் தேதி மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளார்.
அன்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானின் பிரம்மோற்சவ வைபோகத்தை காண வரும் பக்தர்களுக்கு மாட வீதிகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே மெகா தொலைக்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாகன சேவையை காணவரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர், பால், டீ, சிற்றுண்டி மற்றும் உணவுப் பொட்டலங்கள் உடனுக்குடன் வழங்கப்படும். துப்புரவுப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து, அன்னதானம் உள்ளிட்டவை மீது தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வாகன சேவையை மட்டுமின்றி, மூலவரையும் தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24-ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாய் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.