அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வுக் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 29 பேரை குற்றவாளியாகவும், 19 நிறுவனங்களுக்கு இதில் தொடர்புடையதாகவும் சிறப்புக் குழு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.
இதில், ராஜம்பேட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி, முன்னாள் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்து விசாரித்தது. இதில் 4 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனையின் கீழ் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. மீதமுள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக நேற்று டெல்லி, சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, சித்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையை சேர்ந்த 20 குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 7 மணி நேரம் வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்குகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் பினாமியான பிஆர்கே ரெட்டி என்பவருக்கு சொந்தமான மார்கா க்ரூப் அலுவலகத்திலும் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் உள்ளதால் அங்கும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.