‘மார்கோ’ படத்தின் 2-ம் பாகத்துக்கு ‘லார்ட் மார்கோ’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
ஹனீப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. அதே வேளையில் இப்படத்தின் வன்முறை நிறைந்த சண்டைக் காட்சிகள் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இதனை முன்வைத்து 2-ம் பாகத்தில் இருந்து விலகினார் உன்னி முகுந்தன்.
உன்னி முகுந்தன் நடிக்காமல் 2-ம் பாகம் உருவாகாது என்று பலரும் கருதினார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ 2-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று அறிவித்தது. க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் தான் இதன் 2-ம் பாக உரிமை இருக்கிறது. தற்போது அந்த நிறுவனம் 2-ம் பாகத்துக்கு ‘லார்ட் மார்கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குநர், நாயகன் யார் என்றெல்லாம் அறிவிக்கவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. முதல் பாகத்தின் வெற்றியால், 2-ம் பாகத்தை அனைத்து மொழிகளிலும் உருவாக்கி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்துக்கு ஆன சர்ச்சையைப் போலவே, 2-ம் பாகமும் சர்ச்சையை உருவாக்கும் என்பது உறுதி என்றே தெரிகிறது.