‘தனி ஒருவன் 2’ படத்தின் நிலை குறித்து இயக்குநர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா. அவரிடம் ‘தனி ஒருவன் 2’ படம் எப்போது நடைபெறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மோகன் ராஜா, “‘தனி ஒருவன் 2’ படத்துக்கான மீட்டிங் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளருடன் நடைபெற்றது. படத்தின் பட்ஜெட் என்ன என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.
தயாரிப்பாளர் இக்கதையைக் கேட்டுவிட்டு, இந்தக் கதைக்கு இது சரியான நேரம் அல்ல என்றார்கள். பட்ஜெட்டாக பெரியதா என்று கேட்டேன். அப்படியில்லை சார், ரொம்ப அற்புதமான கதை. இக்கதையை படமாக்குவோம், ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. திரையுலகின் நிலை சரியாகட்டும் என்றார்கள். தயாரிப்பாளருடன் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். அனைவரும் நினைப்பது போல சீக்கிரமாக நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்” என்று பதிலளித்துள்ளார் மோகன் ராஜா.
மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த் சுவாமி, நயன்தாரா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.