இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் தேங்கியுள்ளன. கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதுடன் பொம்மைகளை மற்ற நாடுகளுக்கு விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று.. இந்த விழாவில் கொலு பொம்மைகள் வைப்பது என்பது பாரம்பரியம். இதற்காக ஏராளமான கொலுபொம்மைகள் காஞ்சிபுரம் பகுதியில் தயாராகி வருகின்றன.
இந்த கொலு பொம்மைகள் தயாரிப்பதற்கென்று ஒரு தெருவே காஞ்சிபுரத்தில் உள்ளது. இந்த தெருவுக்கு பொம்மைக்காரத் தெரு என்று பெயர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள தெருவில் பல வீடுகளில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி: நவராத்த்திரி விழாவானது இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் சில வெளிநாட்டினராலும் கொண்டாடப்படுகிறது. அங்கும் பொம்மைகளைக் கொண்டு கொலு வைக்கப்படுகிறது. இதற்காக காஞ்சிபுத்தில் இருந்து பல லட்சம் மதிப்பிலான கொலு பொம்மைகள் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவில் இருந்தும் இவர்களிடம் பொம்மைகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. தற்போதைய வரி விதிப்பின் காரணமாக இந்த பொம்மைகளை அங்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விலை அதிகரிக்கும் என்பதால் சிலர் பொம்மைகள் வாங்குவதை தவிர்த்து விடுவதாகவும் பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான கொலு பொம்மைகள் அமெரிக்காவுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டு தேங்கிக் கிடக்கின்றன.
இது குறித்து பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகையில் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கு 16.50 சதவீதம் இறக்குமதி வரியும், 10 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு வந்தது. அந்த கூடுதல் வரி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது அந்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொம்மைகளை ஏற்றுமதி செய்வதில் பெரும் சிக்கலை சந்திப்பதாக பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்தியா போஸ்ட் நிறுவனம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளதாக பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பொம்மை தயாரிப்பில் ஈடுபடும் பாஸ்கர் என்பவர் கூறுகையில் அமெரிக்காவுக்கு இதுவரை இந்தியா போஸ்ட் மூலம் கூரியரில் கிலோவுக்கு ரூ.800 கட்டணத்தில் எங்களால் எளிதில் பொம்மைகளை அனுப்ப முடியும். ஆண்டுதோறும் 5 ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை அமெரிக்காவுக்கு நாங்கள் பொம்மைகளை அனுப்பி வந்தோம்.
ஆனால் தற்போது இந்தியா போஸ்ட் மூலம் அமெரிக்காவுக்கு பொம்மைகளை அனுப்பும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எங்களுக்கு மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம்தான் அனுப்ப முடியும். கட்டணமும் அதிகம். இதனால் பொம்மைகள் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன என்றார்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்த பொம்மை தொழிலை நம்பி காஞ்சிபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களில் சிலர் பொம்மைகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வரிவிதிப்பு காரணமாக பொம்மை உற்பத்தியாளர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு உற்பத்தியாளரிடமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான பொம்மைகள் தேங்கி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் பொம்மைகளை விற்பனை செய்வதற்கான விற்பனை வாய்ப்புகளை உருவாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.