ரோட்டாஸ்(பிஹார்): வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரின் ரோட்டாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “அவர்கள் (காங்கிரஸ்) ஒவ்வொரு முறையும் தவறான கதையை பரப்புகிறார்கள். ராகுல் காந்தி பிஹாரில் ஒரு யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையின் தலைப்பு வாக்கு திருட்டு அல்ல. நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவற்றை வலியுறுத்தியும் அந்த யாத்திரை நடத்தப்படவில்லை.
அந்த யாத்திரையின் நோக்கம் வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதாகும். உங்களில் யாராவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்களா? இல்லை. இது முழுக்க முழுக்க ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் யாத்திரை.
ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட வேண்டுமா? அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமா? வீடு வழங்கப்பட வேண்டுமா? ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு மூலம் இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டுமா?
நமது இளைஞர்களுக்காக அல்லாமல், வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்காக வேலை வாய்ப்பை வழங்குகிறார் ராகுல் காந்தி. தப்பித் தவறி அவர்களின் அரசாங்கம் அமைந்துவிட்டால் பிஹாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே, இது குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அனுராக் தாக்கூர், “அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறானது, ஆதாரமற்றது என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஊடுருவல்காரர்களுக்கே முதல் முன்னுரிமை என்பதே ராகுல் காந்தியின் திட்டமாகத் தெரிகிறது. சட்டவிரோத வாக்காளர்களைப் பாதுகாப்பது என்ற காங்கிரஸின் திட்டத்தை அனுமதித்தால், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.