திண்டுக்கல்: தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம், என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் தவறில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்ககூடாது.
அதிமுக 1972-ம் ஆண்டு எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம். அதற்கு முன்பு 30 ஆண்டுகாலம் திரைத்துறையில் சாதி ஒழிப்பு, மதவேறுபாடு, பொருளாதார வேறுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார் எம்ஜிஆர். எந்த ஜாதி, மொழி, மதம், இனத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் இருந்தார். அவ்வாறே கட்சியையும் வழிநடத்தினார். முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக, பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்டு 1995-ல் கொடியன்குளம் சம்பவம் சர்வதேச பிரச்சினையாக உருவானது.
அவர் அதே ஆண்டு மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு விருதுநகரை மையமாக வைத்து சுந்தரலிங்கனார் போக்குவரத்து கழகத்தை அறிவித்தார். இந்த பெயரை வைத்ததற்காக தென்தமிழகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆளுங்கட்சியை எதிர்த்து பேச எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து பேசியுள்ளார். உள்துறை அமைச்சரிடமும் பேசியுள்ளார்.
உள்கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதை அவர் அரசியல் ரீதியாகத்தான் கையாள வேண்டும். பெயர் வைப்பதில் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய பேச்சை எடுப்பதன் அவசியம் என்ன. ஒரு தரப்பு ஆதரவு கிடைத்தபோதும், மற்றொரு தரப்பு எதிர்க்கத்தான் செய்யும்.
உங்கள் கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ்., சசிகலா பிரச்சினையை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். ஆனால் பெயர் வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம்.
மதுரையை சேர்ந்த மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் கேட்டரிங் ஆர்டர் கொடுத்தவருக்கு பணம் கொடுக்காமல் சாதி குறித்து பேசியுள்ளார். அவரை கட்சியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும். அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் அதிகமாக சாதியை தூண்டும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசுகின்றனர்.
18 லட்சம் பேர் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். அரசு இயந்திரத்தை வைத்திருக்கும் அரசு, நான்கரை ஆண்டுகளாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் ஆறு மாதத்தில் எப்படி தீர்க்கமுடியும். இதனால் மக்கள் மனம் மாறுவார்கள் என சொல்லமுடியாது. 2026 தேர்தல் நாளுக்குநாள் சிக்கலாக உள்ளது. தெளிவான அரசியல் சூழல் ஏற்படாமல் தெளிவற்ற நிலைக்கு தான் செல்கிறது.
புதிய தமிழகம் கட்சி வரவுள்ள தேர்தலை முக்கியமான தேர்தலாக பார்க்கிறது.எங்கள் வெற்றி 2026 தேர்தலில் மிகமிக முக்கியம். அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த மக்களுக்கும் பயன்தருவதாக இல்லை. மக்கள் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவில்லை. ஒரு தலைமுறையே மதுவால் அழியும் நிலை உள்ளது. 100 நாள் வேலை தவிர கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லை. ஏழை, பணக்காரர் இடைவெளி அதிகம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்தால் தான் ஏழை மக்களுக்கு உதவ முடியும்.
ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு. ஜனவரி 7-ல் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்போம். ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பை பிரதானமாக கருதி எங்கள் கூட்டணி அமையும். நாங்கள் தற்போது நடுநிலையாக இருக்கிறோம். 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களின் பிரதான நோக்கம். நாங்கள் வெற்றி பெற வேண்டும், சட்டப்பேரவைக்கு செல்லவேண்டும்.
தவெக புதிதாக அரசியல் களத்தில் நுழைந்துள்ள இயக்கம். அவர்கள் நாளுக்கு நாள் தங்கள் செல்வாக்கை அதிகரித்து வருகின்றனர். அதை இன்னும் பன்மடங்கு அதிகமாக்குவார்களா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தவெகவை கணித்த பிறகே முடிவெடுப்போம். கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்பதில் யாரையும் புறந்தள்ளமாட்டோம். தவெகவையும் கணக்கில் கொண்டே எங்கள் அரசியல் யுத்தியை வகுப்போம், என்றார்.