புதுடெல்லி: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான வார்த்தைகளில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க முடியாது.
உரிய நடைமுறை இல்லாமல், எந்தவொரு வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபர் கூறுவதை கேட்காமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க முடியாது. கடந்த 2023-ல் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை மோசடியாக நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, 2018 தேர்தலில் பாஜகவின் சுபாஷ் குட்டேதர் வெற்றி பெற்றார், 2023-ல் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.பாட்டீல் வெற்றி பெற்றார்.” என தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஆலந்த் (Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர், “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறேன்.
கர்நாடகாவின் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2023 தேர்தலின்போதும் ஆலந்த் தொகுதியில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை இதைவிட அதிகம். ஆனால், யாரோ ஒருவர் தற்போது 6,000 வாக்காளர்களை நீக்கி உள்ளார். அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டபோது, அதை அவரது உறவினர் கண்டுபிடித்துள்ளார். தனது மாமாவின் பெயர் நீக்கப்பட்டது குறித்து அந்த பெண், சோதித்துள்ளார். அப்போதுதான், அந்த வேலையைச் செய்தது தனது பக்கத்து வீட்டுக்காரர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இதுபற்றி கேட்டபோது, தான் நீக்கவில்லை என தெரிவித்துள்ளார். பெயரை நீக்கியவருக்கோ பெயர் நீக்கப்பட்டவருக்கோ இது தெரியவில்லை. வேறு சில சக்திகள் இந்த செயல்முறையை கடத்தி பெயர்களை நீக்கி உள்ளன.
இத்தகைய நீக்கங்கள் தனி மனிதர்களின் பிழைகள் அல்ல. மாறாக, மென்மொருட்களையும் மொபைல் போன்களையும் தவறாகப் பயன்படுத்தி திட்டமிட்ட முறையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்பட்டவை. இது சாதாரண பணியாளர் மட்டத்தில் நடத்தப்படவில்லை.
இந்த நடவடிக்கை காங்கிரஸின் கோட்டைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 2018-ம் ஆண்டில் 10 வாக்குச்சாவடிகளில் 8-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார், வாக்கு மோசடி செய்பவர்களை காப்பாற்றுகிறார். அதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார். இந்த குற்றச்சாட்டை நான் எளிதாக முன்வைக்கவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவே முன்வைக்கிறேன். இதற்கான ஆதாரம் தெளிவாக உள்ளது. அதில் எந்த குழப்பமும் இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக சிஐடி 18 மாதங்களில் தேர்தல் ஆணையத்துக்கு 18 கடிதங்களை அனுப்பி உள்ளது. அவர்கள், தேர்தல் ஆணையத்திடம் சில எளிய கேள்விகளையே முன்வைத்துள்ளனர். ஆனால், அவர்களின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்காததற்குக் காரணம், அது இந்த மோசடி நடக்கும் இடத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லும் என்பதால்தான். ஆனால், நாங்கள் உறுதியாக உள்ளோம்.
நான் முன்பு கூறியது போல, வாக்கு திருட்டு தொடர்பான ஹைட்ரஜன் குண்டு அல்ல இது. எனது வேலை ஜனநாயக அமைப்பில் பங்கேற்பது. அரசியலமைப்பு நிறுவனங்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்யவில்லை.” என தெரிவித்தார்.