சென்னை: புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், “முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும் அக்டோபர் 12ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாகவும் இந்த தேர்வில் கல்வியியல், உளவியல் மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டமும் கூடுதலாக இணைத்து பழைய பாடத்திட்டத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே புதிய பாடத்திட்டத்திற்கு உரிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் எனவே போட்டி தேர்வை மூன்று வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சுரேஷ்குமார் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்தார்.