இங்கிலாந்தின் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தல் இங்கிலாந்தின் டி20 அத்தியாயத்தை அட்டகாசமான வெற்றியுடன் தொடங்கியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 197 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.
பெத்தல் தன் கேப்டன்சியை அற்புதமாகத் தொடங்கியது எப்படி தெரியவருகிறதெனில் டாஸ் வென்று பசுந்தரை பிட்சில் அயர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
முதலில் பேட் செய்த அயர்லாந்தும் ஒன்றும் ஏப்பை சோப்பையாக ஆடவில்லை. 20 ஓவர்களில் 196 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்துக்கு ஒரு இறுக்கமான, சவாலான இலக்கையே அளித்தது. ஆனால் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஃபில் சால்ட் தன் வாழ்நாள் ஃபார்மில் இருக்கிறார். அவர் 46 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 89 ரன்களை விளாசித்தள்ளினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த வாரம்தான் அதிரடி விளாசல் 141 ரன்களை எடுத்திருந்தார், இப்போது 2வது சதத்தை தொடர்ச்சியாக எடுத்துள்ளார் ஃபில் சால்ட். இவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரு அடக்க முடியாத ஆற்றலாக உருவெடுத்து வருகிறார் என்பதற்கு இவைகள்தாம் அடையாளம். அன்று ஃபில் சால்ட்டின் வகைதொகையற்ற புரட்டலால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20-யில் 304 ரன்களை குவித்தது இங்கிலாந்து. அன்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து நேற்றும் கடினமான 196 ரன்கள் இலக்கு ஃபில் சால்ட்டின் காட்டடி தர்பாரில் 3 ஓவர்கள் மீதமிருக்க இங்கிலாந்து வெற்றியில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஃபில் சால்ட் கூறும்போது, “நான் மகிழ்ச்சியுடன் ஆடினேன், பிரமாதமான பேட்டிங் பிட்ச். இந்தப் பிட்சில் நின்று விட்டால் போதும் அடுத்தது நன்றாக ஆடலாம். ஆனால் அயர்லாந்தையும் பாராட்டத்தான் வேண்டும், இந்த 196 ரன்கள் இலக்கை எடுக்க அவர்கள் அற்புதமாக ஆடினார்கள்.” என்றார்..
அயர்லாந்தின் மிக அருமையான இரு வீரர்கள் ஹாரி டெக்டர் (61 நாட் அவுட்), லோர்க்கன் டக்கர் (55) இருவரும் சேர்ந்து 123 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இந்த ரன்கள் 68 பந்துகளில் விளாசப்பட்டது என்பதே அயர்லாந்து அந்த ரன் இலக்கை எட்ட காரணமாக அமைந்தது. தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் (22 பந்துகளில் 34, 1 பவுண்டரி 4 சிக்சர்), ராஸ் அடைர் (26- 25 பந்துகள் 3 பவுண்டரி 1 சிக்சர்) சேர்ந்து 7 ஓவர்களில் 57 ரன்கள் என்ற நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
9வது ஓவரில் 67/2 என்ற நிலையில் டெக்டர் மற்றும் டக்கர் இணைந்தனர். ஸ்டர்லிங் ஆட்டமிழந்தவுடனேயே 2 பந்துகளில் ஆதில் ரஷீத்தை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் விளாசினார் டெக்டர். ரேஹனின் முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு பறக்க விட்டார். டக்கர் சாம் கரன் பந்தை ஸ்கொயர்லெக்கில் ஹைபிளிக்கில் பவுண்டரி அடித்தார். 34 பந்துகளில் டெக்டரும் 35 பந்துகளில் டக்கரும் அரைசதம் எடுத்தனர். டெக்டர் ஒரு எல்.பி. தீர்ப்பில் தப்பினார். கடைசி 3 ஓவர்கள் 45 ரன்கள் வந்தது, அயர்லாந்து வீரர் டாக்ரெல் தான் எதிர்கொண்ட ஒரே பந்தை, அதாவது கடைசி பந்தை சிக்சருக்கு விளாச ஸ்கோர் 196 ரன்கள் என்று சவாலான இலக்கானது.
ஆனால் எனக்கு அதெல்லாம் சவால் இல்லை என்று ஃபில் சால்ட்டும் பட்லரும் முடிவு செய்து விட்டு அடி வெளுத்து வாங்கினர். அன்று தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சில் 47 பந்துகளில் 126 ரன்களைக் குவித்தனர். நேற்று இருவரும் 28 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்தனர். பாரி மெக்கார்த்தியின் முதல் ஓவரில் சால்ட் 2 சிக்சர்களை விளாசினார். கிரகாம் ஹியூம் வீசிய மீடியம் ஃபாஸ்ட் பட்லருக்கு தொக்காகப் போனது. 22 ரன்களை ஒரே ஓவரில் விளாசித்தள்ளினார். அதாவது 4 பவுண்டரி 1 சிக்ஸ்.
பட்லர் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனாலும் சால்ட் எனக்கென்ன என்று அடித்த வண்ணமே இருந்தார். 20 பந்துகளில் 50 என்று அதிரடி காட்டினார். கிரெய்க் யங்கை 2 பவுண்டரிகள் அடிக்க இங்கிலாந்து 8 ஓவர்களுக்குள் இங்கிலாந்து 100 ரன்களைக் கடந்தது. ஜேக்கப் பெத்தெல் 16 பந்துகளில் 24 ரன்களையும் சாம் கரன் 3 அதிரடி சிக்சர்களுடன் 15 பந்தில் 27 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 197/6 என்று 18வது ஓவரில் வெற்றி ஈட்டியது.