ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐசிசி ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்திருந்தது, இந்நிலையில் மைதானத்திற்கு வருவதற்கு பாகிஸ்தான் வீரர்கள் தாமதம் செய்தனர்.
நேற்றைய ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமானது இந்தச் சர்ச்சையினால்தான். இந்நிலையில் ஆண்டி பைகிராஃப்ட், பாகிஸ்தான் கேப்டன், பாகிஸ்தான் மேலாளர் ஆகியோர் தனியறையில் சந்தித்ததாகத் தெரிகிறது, அதன் பிறகே பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மேலாளரிடம் ஆட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்புக் கேட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி வீரர்கள் கைகுலுக்குவதை இவர்தான் தடுத்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, “ஆண்டி பைகிராஃப்டின் செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்து ஆண்டி பைகிராப்ட் செப்டம்பர் 14ம் தேதி நடந்த சம்பவம் தவறான தொடர்புறுத்தலால் நிகழ்ந்தது என்று மன்னிப்புக் கோரினார். செப்டம்பர் 14ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்பதை விசாரிக்க ஐசிசி விருப்பம் தெரிவித்தது” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையுடன் பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடனும் பயிற்சியாளர் ஹெசனுடனும் பேசிய வீடியோவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நேற்றைய யுஏஇ.க்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பைகிராஃப்டை நீக்கி ரிச்சி ரிச்சர்ட்சனை மேட்ச் ரெஃப்ரீயாக நியமிக்க பாகிஸ்தான் கோரியது. பைகிராப்ட்தான் இந்திய-பாகிஸ்தான் கேப்டன்களிடம் டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. ஆகவே பைகிராப்டை நீக்க வேண்டும் என்று கோர அதற்கு ஐசிசி அடிபணிய மறுத்தது. அதனால்தான் நேற்றைய போட்டி தொடங்கும் முன் சிலபல சர்ச்சைகளும் நிச்சயமின்மைகளும் ஏற்பட்டன. இப்போது பைகிராப்ட் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது,.