புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானை நமது வீரர்கள் அடிபணிய வைத்ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டரே ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள், நூர் கான் விமானம் உட்பட பல கட்டமைப்புகள் நாசமடைந்தன.
இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோவில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தினர் சிதைக்கப்பட்டனர்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று 75-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். இதை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை இந்திய வீரர்கள் அடிபணிய வைத்தனர். இதை தீவிரவாதியே ஒப்புக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதை இந்த நாடும் உலகமும் பார்த்தது. பாகிஸ்தானி தீவிரவாதி தன்னுடைய நிலைமையை கூறி கதறுகிறார். இது புதிய இந்தியா, யாருடைய அணுஆயுத மிரட்டலுக்கும் பயப்படாத இந்தியா.
பாரத தாயின் பாதுகாப்புக்கு இந்த நாடு முன்னுரிமை அளிக்கிறது. நமது சகோதரிகள், மகள்கள் 26 பேரின் சிந்தூரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் அழித்தனர். அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய வீரர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய மைத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.