சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அடுத்த 9 மாதத்துக்குள் அனைத்து சுயஉதவிக் குழு மகளிருக்கும் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4.76 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 54 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் சுயஉதவிக் குழு மகளிரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி சேலத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த 9 மாதங்களில் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்கும் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைகளைப் பயன்படுத்தி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தங்களுடைய தயாரிப்புகளில் 25 கிலோ எடையுள்ள பொருட்களை அரசு பேருந்துகளில் 100 கி.மீ. வரை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.
அதேபோல் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கும் பயிர் கடன், கால்நடை கடன், சிறு வணிகக் கடன், தொழில்முனைவோர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் போன்றவற்றில் முன்னுரிமை வழங்கப்படும்.
10% சேவை கட்டணம் குறைப்பு கோ-ஆப்டெக்ஸில் 5 சதவீத தள்ளுபடி, ஆவின் கடைகளில், இ-சேவை மையங்களில் 10 சதவீத சேவை கட்டணம் குறைப்பு போன்ற சலுகைகளும் இதன்மூலம் கிடைக்கும். மேலும் இந்த அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் அட்டைக்கு முதன்மை ஆதாரமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.