மதுரை: ‘ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல’ என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அய்யா கண்ணு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர், விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தச் செல்வதை தடுக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், “டெல்லியில் போராட்டம் நடத்த நானும், எனது சங்க உறுப்பினர்களும் ரயிலில் பயணம் செய்ய முயன்றபோது போலீஸார் எங்களை கட்டாயப்படுத்தி இறக்கி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், “டெல்லியில் மனுதாரர் பல ஆண்டுகளுக்கு முன் 100 நாட்கள் போராட்டம் நடத்தினார்.
அப்போது, மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள், மூத்த குடிமகன்களை வைத்து அரை நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட ஆபத்தான போராட்டங்களை நடத்தினார். போராட்டங்கள் நடத்தும்போது விதிக்கும் நிபந்தனைகளை மீறி செயல்படுகிறார். எனவே, இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி, “அமைதியாக போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் போராட்ட முறைகள், செல்போன் கோபுரங்களில் ஏறுதல், மூத்த குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், பொது போராட்டங்களில் மண்டை ஓடுகள் மற்றும் கூண்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை சட்டப்பூர்வமான போராட்டத்துடன் பொருந்தாது.
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன் அனுமதி கோர வேண்டும். மேலும், அனுமதி வழங்கப்படும்போது காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் மதிக்கப்பட வேண்டும். மனுதாரர் உடனடியாக சட்டத்தின் உதவியை நாடியிருக்கலாம்.
மனுதாரர் முன் அனுமதி பெற்று சட்டப்படி போராட்டங்களை நடத்த வேண்டும். மனுதாரர் டிக்கெட்டுகளை வைத்திருக்கும்போது, அவர் ரயிலில் பயணம் செய்வதை தன்னிச்சையாக தடுக்க உரிமையில்லை. அவ்வாறு தடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் வழக்குத் தொடர உரிமை உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.