தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
அவர் மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்தி வாய்ப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ், தெலுங்கு மலையாளத்தில் எனக்கு சிறந்த கதைகள் கிடைக்கின்றன. அந்தப் படங்களை விரும்பி ஏற்கிறேன். அதற்காக இந்தி படங்களில் நடிப்பதைத் தீவிரமாகத் தவிர்த்து வருகிறேன். பல கதைகள் வந்தன. எதுவும் உற்சாகமான, வித்தியாசமான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அதனால் நிராகரித்து விட்டேன். ஸ்கிரிப்ட் உற்சாகப்படுத்தினால் மட்டுமே படங்களை ஏற்கிறேன். ஒரு படத்துக்காக 5 மாதங்களை முழுமையாகச் செலவழிக்கிறோம் என்றால், அந்த கதையோ, கதாபாத்திரமோ முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.