சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சத்துணவு திட்டத்தில் இன்றைக்கு ஏறத்தாழ 85 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. அதேபோல் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இதுவரை அமல்படுத்த இல்லை.
தமிழகத்தில் தாய் சங்கங்கள் என்று கூறப்படும் ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியம், சிஎன்டி அலுவலர் கழகம் போன்ற சில அமைப்புகள் 35 ஆண்டுகளாகசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் உழைப்பை சுரண்டி வருகின்றன.
எங்களது கோரிக்கைகள் தொடர்பாக வாய் திறப்பதே இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி, மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படியுடன் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
இதை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் மாநில மாநாட்டை சென்னையில் வரும் நவம்பர் மாதம் நடத்தவுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் மொத்தமாக 2.5 லட்சம் சத்துணவு ஊழியர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 4 முதல் 5 ஓட்டுக்கள் என்றாலும் 10 லட்சம் ஓட்டுக்கள் வரும். ஆனால் எந்தவொரு அரசியல் கட்சி பின்னாலும் நாங்கள் செல்ல தயாராக இல்லை.
அதேநேரம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூடி முடிவெடுத்து, 2026 தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பதை தெளிவுபடுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.