கரூர்: “இப்போதும் சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே…‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று என்ன மாற்றப் போகிறார்கள் ? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா ?” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா ? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்.
75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே, “திமுகவை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள். இப்போதும், சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே… “திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று” என்று. என்ன மாற்றப் போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா?
நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்… மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்… மறைந்து போனார்கள்… ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை. இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ். நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது” என்று கூறினார். முழு உரையை வாசிக்க > “அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தவெக தலைவர் விஜய் தனது பேச்சுகளில், தமிழகத்தில் தவெகதான் மாற்று என்றும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று கூறி வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.