கோவை: தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவார்கள். அதுவே பிரதமர் மோடிக்கு நாங்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் பெண்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை இரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே பாஜக சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரியளவில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டும் அதேபோல நிகழ்வு நடத்தப்படுகிறது.
மேலும் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ‘மோடியின் தொழில் மகள்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி வரும் 20-ம் தேதி நடக்கிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு இரட்டை இலக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு செல்ல உள்ளனர். இதுவே பிரதமருக்கு நாங்கள் வழங்கும் பிறந்த நாள் பரிசாகும்” என்று அவர் தெரிவித்தார்.