புதுடெல்லி: பிஎம்டபுள்யூ கார் விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் அவர்களின் பைக் மீது பின்னால் இருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த நவ்ஜோத் சிங் உயிரிழந்தார், அவரின் மனைவி சந்தீப் கவுர் காயமடைந்தார்.
இந்த விபத்து பற்றி நவ்ஜோத் சிங்கின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், “விபத்துக்குப் பிறகு, உடனடியாக சிகிச்சை பெறுவதற்காக என்னையும் எனது கணவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, விபத்தை ஏற்படுத்திய பெண் கார் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் அதனை மறுத்த அவர், விபத்து நடந்த இடத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள அவரின் உறவினரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நவ்ஜோத் சிங்கின் மரணத்துக்கு காரணமாக பிஎம்டபுள்யூ காரை ஓட்டிவந்த பெண் ககன்ப்ரீத் கவுர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, “விபத்து வழக்கு ஒரு குற்றமற்ற கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி வழக்கைப் பதிவு செய்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் வேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக அவர் கருதினார். ஒரு பெண்ணாக இருந்தால், மரண தண்டனை வழக்குகளிலும்கூட ஜாமீன் வழங்கப்படலாம். விபத்து நடந்து 10 மணி நேரம் கழித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஒவ்வொரு ஆண்டும் 5,000 விபத்துகள் நடக்கின்றன, அவை அனைத்துமே துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி, ககன்ப்ரீத் கவுருக்கு ஜாமீன் வழங்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.
மேலும், நவ்ஜோத் சிங்கின் இருசக்கர வாகனத்தை முதலில் மோதிய டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்து மற்றும் விபத்தின் போது நிற்காமல் சென்ற ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கவுரின் வழக்கறிஞர் கூறினார்.
இதற்கு எதிர் வாதமாக, “விபத்து நடந்த இடத்திலிருந்து 19 கி.மீ தொலைவுக்கு காயமடைந்தவரை அழைத்துச் சென்று வடக்கு டெல்லியில் உள்ள நியூ லைஃப் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினருக்குச் சொந்தமானது.
காயமடைந்த நவ்ஜோத் சிங்கின் மனைவி அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். காயமடைந்தவர் ஸ்ட்ரெச்சரில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இது என்ன வகையான மருத்துவமனை?. அவரை இவ்வளவு தூரம் அழைத்துச் சென்றிருப்பதால், இதில் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் வினவினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.