புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவை நோக்கிப் பேசிய பி.ஆர். கவாய், “விவசாயிகள்தான் நம் அனைவருக்கும் உணவை வழங்குகிறார்கள். அவர்களால்தான் நாம் சாப்பிடுகிறோம். அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். அதேநேரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் வைக்கோல்களை எரிப்பதை எப்படி ஏற்பது? சுற்றுச்சூழலை பாதிப்பது விவசாயிகள் என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
அவர்களில் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் உங்களிடம்(பஞ்சாப் அரசு) இருந்தால், விவசாயிகளில் சிலரை தண்டிப்பது குறித்து நீங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஏன் வெட்கப்படுகிறீர்கள்? வைக்கோலை உயிரி எரிபொருளாகவும் பயன்படுத்தலாம் என செய்தித்தாள்களில் நான் படித்தேன். இதற்கு இன்னும் 5 வருடங்களை எடுத்துக்கொள்வதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
பட்டாசுகளை வெடிப்பதால் டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனில், டெல்லிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? பட்டாசு வெடிக்க ஏன் முழு நாட்டுக்கும் தடை விதிக்கக்கூடாது என்று பி.ஆர். கவாய் இதற்கு முன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது விவசாயிகள் விஷயத்திலும் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால தொடக்கத்தில், டெல்லியின் காற்று மாசு ஆபத்தான அளவுக்குச் செல்கிறது. பட்டாசுகளை வெடிப்பதால் மட்டுமல்லாது, விளைநிலங்களில் அரசி, கோதுமை ஆகியவற்றை அறுவடை செய்த பிறகு எஞ்சியுள்ள வைக்கோல் பகுதியை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்று மாசு ஏற்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.