புதுடெல்லி: ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் துறை ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிதி சேவைகள் துறை, காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய உயரதிகாரிகள், ஆயுள் காப்பீடு கவுன்சில் மற்றும் பொது காப்பீடு கவுன்சிலின் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டத்தில் ஒப்புதல் அளித்தபடி அனைத்து தனிநர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நிதி சேவைகள் துறை செயலாளர் என்.நாகராஜு தலைமை வகித்துப் பேசுகையில், “மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தமானது காப்பீட்டை மிகவும் அணுகக்கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் காப்பீடு பரவலாக சென்றடைவதுடன் காப்பீட்டு நிறுவங்களின் நிதி பாதுகாப்பும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி சீரமைப்பின் பலன்கள் ஏற்கெனவே உள்ள பாலிசிதாரர்கள், வருங்கால பாலிசிதாரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதிக நோயாளிகளை காப்பீடு சென்றடைந்து மருத்துவமனைகளுக்கும் பயனளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.