தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் நடைபெற்ற அரபு – இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் எங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஆட்சேபனை இல்லை. ஆனால், இது இரு தரப்பு விவகாரம் என கூறி மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. கடந்த ஜூலை 25ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர், இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறுகிறது என தெரிவித்தார்.
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது. பேச்சுவார்த்தை மூலம் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண பாகிஸ்தான் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. அனைத்துத் தரப்பில் இருந்தும் நேர்மையும் தீவிரமும் இருந்தால், பேச்சுவார்த்தைதான் முன்னேற்றத்துக்கான சிறந்த வழி. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்படாது.
தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது. இதற்கான போராட்டத்தில் பாகிஸ்தான் மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். இருந்தும், இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக நிறுத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. தண்ணீரை நிறுத்தும் எந்த ஒரு முயற்சியும் போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் அணுசக்தி முற்றிலும் தற்காப்புக்காக மட்டுமே உள்ளது. அதைப் பயன்படுத்த எந்த நோக்கமும் இல்லை. அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை பாதிக்கப்பட்டால், அது தன்னை தற்காத்துக்கொள்ள எந்த விலையையும் கொடுக்கும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி.
கத்தார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல், சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம், முஸ்லிம் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை. லெபனான், சிரியா, ஈரான் தற்போது கத்தார் ஆகிய நாடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதை ஏற்க முடியாது. அமெரிக்கா உடனும், எகிப்து உடனும் கத்தார் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அதை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி உள்ளது.
57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவது தற்போது பொருத்தமானதாக இருக்காது. மாறாக, இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெளிவாகக் கூறும் செயல்திட்டமே தேவை.
பாகிஸ்தான் எப்போதும் அமைதி, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, ஆக்கிரமிப்பும் நிற்கவில்லை என்றால் பயனுள்ள நடவடிக்கைகள் அவசியமாகிறது. இதில், பொருளாதாரத் தடைகள், சட்ட நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்புப் படையை உருவாக்குதல் உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.