90களின் ஆரம்பத்தில் கல்லூரியில் வணிகவியல் (B.Com.) என்பது ஒரு பாடத் திட்டமாக இருந்தது. இன்று, வணிகவியல் பாடத்தின் கீழ் Computer Applications, Profes sional Accounting, International Accounting, Business Analytics என அத்தனை உட்பிரிவுகள். ஒவ்வொரு பாடத்திட்டத்தின் கீழ், உட்பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை 60 என்கிற போதும், உட்பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், மாணவர் சேர்க்கை விகிதம் ஐந்து முதல் ஆறு மடங்கு பெருகியுள்ளது. இதனால் கல்லூரிகள் ‘ஷிப்ஃட்’ அடிப்படையில் வகுப்புகளைப் பிரித்து நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
வேலை கிடைக்கிறதா? – கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்கள் வருவதும், நிறைய மாணவர்கள் சேர்ந்து படிப்பதும் ஆரோக்கியமானதுதானே என்கிற கேள்வி எழலாம். ஆனால், பிரச்சினை அதுவல்ல. இந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளால் எவ்வாறு பட்டை தீட்டப்படுகிறார்கள் என்பதே பிரச்சினை. அனைவருக்கும் பட்டம் கிடைக்கிறதே தவிர, நல்ல வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
‘ஷிஃப்ட்’ முறையில் இயங்கும் கல்லூரிகள் காலை 9 முதல் 2 மணி வரையும், மதியம் 2 முதல் 7 மணி வரையும் இயங்குகின்றன. காலை வரும் மாணவர்கள் மதியமும், மதியம் வரும் மாணவர்கள் காலையும் ஓய்வில் உள்ளனர்.
இந்த நேரத்தை மாணவர்கள் எவ்வளவு பயனுள்ளதாக மாற்றுகிறார்கள்? இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்களில் 8 மணி நேரப் பணியை உள்ளடக்கியதாக இருப்பதில்லை. அதையும் தாண்டி ஒருவர் பணியில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் ‘ஷிஃப்ட்’ முறையில் பயிலும் மாணவர்கள், உயர் கல்விக்குச் செல்லும்போது அல்லது நிறுவனங்களில் பணிக்குச் சேரும்போது சவால்களை எதிர்கொள்கின்றனர்.
என்ன செய்யலாம்? – புதிய பாடத்திட்டங்கள் வருவதில் குழப்பம் இல்லை. ஆனால், மாணவர் சேர்க்கை 60இல் இருந்து 120 தாண்டி 180 அல்லது 240 என்று செல்லும்போது போதுமான ஆசிரியர்கள், போதுமான கூடங்கள், கணினி ஆய்வகங்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களுக்கான அறிவுசார் வகுப்புகளாக இல்லாமல் வெறும் பட்டம் பெறுவதற்கான வகுப்புகளாக அவை மாறுகின்றன.
பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும்போதே மூன்று இலக்க மாணவர் சேர்க்கை முறையைக் கையாளாமல், படிப்படியாகப் பாடத்தின் தன்மை ஆசிரியர்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு, மாணவர் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையைக் கூட்டுவது நல்லது.
மாணவர்களும் ஒரு படிப்பை எதற்காகப் படிக்கிறோம், அதனால் என்ன பயன், வேலைவாய்ப்பு கிடைக்குமா என்பதை அறிந்து பாடத்திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள அறிவைப் பெருக்கிக்கொள்ள தேவையான அனைத்து உத்திகளையும் மாணவர்கள் கையாள வேண்டும். கல்லூரி நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் சிறப்புச் சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம். வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தத் தேவையான முக்கியத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.
– கட்டுரையாளர், திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்; karthikeyan-mba@saranathan.ac.in