சென்னை: சுதந்திர போராட்ட வீரர் எம்.எஸ். ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்த தினத்தையொட்டி அவரது படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் கிண்டி ஹால்டா சந்திப்பில் உள்ள ராமசாமி படையாட்சியின் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர்.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏஎம்வி பிரபாகரராஜா, எஸ்எஸ் பாலாஜி, அரவிந்த் ரமேஷ், கே.கணபதி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் மற்றும் ராமசாமி படையாட்சியார் வாழப்பாடி பேரவை தலைவர் சைதை வீ.தேவதாஸ், வன்னியர் கூட்டமைப்பின் நிர்வாகி சி.ஆர்.பாஸ்கரன், ராமசாமி படையாட்சியின் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் ராமசாமி படையாட்சியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் புரூஸ், சுதா ராமகிருஷ்ணன், தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி டெல்லியில் ராமசாமி படையாட்சியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.தம்பிதுரை, ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர் சி.வீ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் வாழ்த்து: ராமசாமி படையாட்சியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான ராமசாமி படையாட்சியின் பிறந்த நாளில் அவரது பங்களிப்புகளை போற்றி வணக்கம் செலுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 108-ஆம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன். பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவரின் பணிகளைப் போற்றும் இந்நாளில், சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சுதந்திர போராட்ட வீரரான ராமசாமி படையாட்சி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, அனைவரிடமும் அன்பு செலுத்தியவர். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்காக தொண்டாற்றியவர். அவரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்குவோம்.