குவாஹாட்டி: இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா. இவர் கம்ரூப் மாவட்டத்தின் கோராய்மாரி பகுதியில் வட்டார அதிகாரியாக 6 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என முதல்வர் அலுவலகத்துக்கு ஊழல் புகார்கள் வந்தன.
மேலும் இவர் பர்பேட்டா மாவட்டத்தில் பணியாற்றியபோது, இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்தார் எனவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து நூபூர் போரா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கைப்பற்றப்பட்டதாக எஸ்.பி. ரோசி கலிதா தெரிவித்தார்.
இவருக்கு குவாஹாட்டி கோட்டா நகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நூபூர் போராவுடன் இணைந்து குற்றம்சாட்டப்பட்ட சுரஜித் தேகா என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அசாமில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் இவர் பணியாற்றியபோது ஊழலில் ஈடுபட்டுள்ளார் என முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
அசாமில் இந்துக்களின் நிலங்கள் எல்லாம் வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. அசாம் மாநிலத்தில் வசித்த பூர்வீக மக்கள் எல்லாம் வேறு இடங்களுக்கு மாறுவதும், அங்கு சட்ட விரோதமாக ஊடுருவிய சிறுபான்மையினர் தங்குவதும் அதிகரித்தது.
இது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதால், இந்துக்களின் நிலங்கள் வேறு பிரிவினருக்கு மாற்றுவதற்கு காவல்துறை ஒப்புதல் பெற, நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (எஸ்ஓபி) அசாம் சட்டப்பேரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அசாம் அதிகாரி நூபூர் போரா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ஊழல் பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.