சென்னை: கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ராமநாதன், நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் என் மனைவியும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.20 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்தோம். மத்திய அரசு அனுமதியளிக்காததால் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, முன்பணத்தை திருப்பி செலுத்தாமல் நிறுவனம் அலைக்கழித்தது. சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லவில்லை. எனவே, இழப்பீட்டு தொகையும் முன்பதிவு கட்டணத்தையும் வழங்க சுற்றுலா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “கைலாஷ் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்திய மற்றும் சீன அரசுகள் உறுதிப்படுத்தாதபோது, மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சுற்றுலா நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பணம் வசூலித்து நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே, பதிவுக் கட்டணம் ரூ.20 ஆயிரத்துடன், இழப்பீடாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.