நாகர்கோவில்: தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய அவர்களது செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, கைதான ஒருவருடன் நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்த ரஷித் அகமது என்பவரின் மகன் ஹூசன் உசைன் (28) என்பவர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி, ஆந்திரா மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை வட்டவிளையில் உள்ள ஹூசன் உசைன் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு உசைன் இல்லை. அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
உசைன் குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, தங்களது மகன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்றிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உசைன் வீட்டில் காலை 6 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர், உசைனை விசாகப்பட்டினம் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து வருமாறு அவரது பெற்றோரிடம் கூறிய என்ஐஏ அதிகாரிகள், அது தொடர்பாக சம்மன் கொடுத்து விட்டு சென்றனர். என்ஐஏ சோதனையை தொடர்ந்து உசைனின் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.