புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கானோர் வருமான வரித் துறை இணையதளத்தில் தங்களின் கணக்கை தாக்கல் செய்ய முயன்றனர். இதன்காரணமாக இணையதளம் முடங்கியது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டன. காலஅவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: தொழில்நுட்ப கோளாறு காரணமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவரை 7.3 கோடி பேர் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். காலஅவகாசம் நிறைவடைந்த பிறகும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
இதன்படி ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் வருமானம் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.