சென்னை: மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகி வாக்களிக்கும் வகையில் தேவையான வசதிகளை சட்டப்பூர்வமாக செய்து கொடுக்கவும், வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளை அணுகும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் பார்வையற்றோர் வாக்களிக்க உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.