பெங்களூரு: கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது செல்லாது, அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் மாவட்டம், மாலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நஞ்சே கவுடாவுக்கும், பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் கவுடாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இருவரும் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை வரை மாறி மாறி முன்னிலை வகித்தனர்.
இறுதியில் மஞ்சுநாத் கவுடா 50,274 வாக்குகள் பெற்ற நிலையில், நஞ்சே கவுடா கூடுதலாக 781 வாக்குகள் பெற்று (50,955 வாக்குகள்) வெற்றி பெற்றார். இதனால் மஞ்சுநாத் ஆதரவாளர்கள் மீண்டும் வாக்குகளை எண்ண வலியுறுத்தினர். இதை எதிர்த்து மஞ்சுநாத் கவுடா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் தலைமையிலான அமர்வு கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்தது. இவ்வழக்கில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தேவதாஸ் தனது தீர்ப்பை அறிவித்தார்.
அதில், ‘‘வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நஞ்சேகவுடா தரப்பினர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்திருப்பதை எதிர் தரப்பினர் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். எனவே நஞ்சே கவுடாவின் தேர்தல் வெற்றி செல்லாது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நஞ்சேகவுடா தரப்பில், ”இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடக்கூடாது. எங்களது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
30 நாட்கள் அவகாசம்: இதனை ஏற்ற நீதிபதி, ”மேல்முறையீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்காவிட்டால், தேர்தல் ஆணையம் அந்த தொகுதியை காலியானதாக அறிவிக்கலாம்” என உத்தரவிட்டார்.