அரூர்: இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் (பி.வி.கே அணி) பி.வி.கரியமால் (98) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
சிறு வயதில் இருந்தே பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய இவர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர்.
இரட்டை குவளை முறை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டார். அம்பேத்கரின் மகன் எஸ்வந்தராவ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த இவர், 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அரூர் தொகுதியில் பாமக சார்பிலும், 1996-ல் பாமக ஆதரவுடனும் போட்டியிட்டுள்ளார்.
பி.வி.கரியமால் உடலுக்கு நேற்று பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.